செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி திருக்கோவிலில் தைப்பூச தினத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இன்று அதிகாலை முதலே சரவண பொய்கையில் பக்தர்கள் நீராடி முடிக்காணிக்கை செலுத்தினர்,
தொடர்ந்து பால்குடம் மற்றும் புஷ்ப காவடி, பன்னீர் காவடி எடுத்தும், அலகு குத்தியும், துலாபாரம் செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சுவாமி வழிபாடு மற்றும் நேர்த்திகடன் செலுத்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்போரூர் பகுதிக்கு வந்ததால், நகரப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இரவு சரவண பொய்கை குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
இதில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வாணையுடன் எழுந்தருளி வானவேடிக்கையுடன், மங்கள வாத்தியம் முழங்க சரவண பொய்கையில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாட்டினையும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.