செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதிகளில், வசிப்பிடம் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்காமல் தவிர்க்க, வடிகால்வாய்கள் துார்வாரப்பட்டன. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மாமல்லபுரம் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இவ்வூர் மணற்பரப்பு பகுதி என்பதால், பல மணி நேரம் தீவிர கனமழையே பெய்தாலும், மழை நின்றதும் உடனே வடிந்து விடும்.
எனினும், சாலையில் பெருக்கெடுக்கும் மழைநீரால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படும். மழைநீர் வடிய அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாய்களில், குப்பை, மணல் குவிந்துள்ளதால், வடிகால்வாயில் நீர் செல்ல இயலவில்லை. மழைநீர் தேக்கத்தை தவிர்க்க, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வடிகால்வாய்களில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக, குப்பை, மணல் அகற்றி துார்வாரப்பட்டது. திருக்கழுக்குன்றம் பகுதியிலும், மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, வடிகால்வாய்கள் துார்வாரி பராமரிக்கப்பட்டதாக, பேரூராட்சித் தலைவர் யுவராஜ் தெரிவித்தார்.