செங்கல்பட்டு அடுத்த பாலுார் கிராமத்தில், அடுத்தடுத்துள்ள மெடிக்கல், பேக்கிரி, மளிகை கடைகளில், நேற்று அதிகாலை பூட்டு உடைக்கப்பட்டு, கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக, பாலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதே போல், பாலுார் அடுத்த வில்லியம்பாக்கம் கிராமத்தில், ஒரு அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்ததில், முகமூடி அணிந்து, கத்தியுடன் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல், மெடிக்கல் மற்றும் மளிகை கடையில் தலா 4, 000 ரூபாய், பேக்கிரியில் 2, 000 ரூபாய் மற்றும் மளிகை பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.
போகிற வழியில், வில்லியம்பாக்கம் பகுதியில் உள்ள அடகு கடையின் பூட்டை உடைத்து, 700 கிராம் எடை கொண்ட வெள்ளி பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
அதிகாலை நேரத்தில் அடகுக் கடை கதவு திறந்து கிடப்பது குறித்து, அப்பகுதிவாசிகள் அளித்த தகவலின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் மர்ம கும்பல் தப்பிச் சென்றது.