காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சின்னாளம்பாடி ஊராட்சி, மாம்புதூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 200 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், பெரிய ஏரிக்கு அருகே தனிநபர் ஒருவரின் கல் குவாரி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த கல் குவாரிக்கு செல்ல போதிய பாதை வசதி இல்லாமல் உள்ளது.
இதனால், பெரிய ஏரியில் இருந்து செல்லும் நீர்வரத்து கால்வாய் மீதும், சமூக காடுகள் வழியாகவும் வழியை ஏற்படுத்தும் முயற்சி, ஆறு மாதங்களுக்கு முன் நடந்தது. இதற்கு, மாம்புதூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் கைவிடப்பட்டது. தற்போது, மீண்டும் குவாரிக்கு பாதை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இதையறிந்த கிராம மக்கள், நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, நீர்வரத்து கால்வாய் மீதும், சமூக காடுகள் வழியாகவும் பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், பொக்லைன் இயந்திரத்தை கொண்டு, நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட பாதையை அகற்றினர். தகவலறிந்த, வருவாய் ஆய்வாளர் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் பாபு ஆகியோர், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.