காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், அண்ணா அரங்கத்தின் முதல் மாடியில், மேயர் மகாலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், கமிஷனர் செந்தில்முருகன், துணை மேயர் குமரகுருநாதன், கவுன்சிலர்கள், அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.
கூட்டம் துவங்கியவுடன், மஞ்சள் நீர்க்கால்வாய், அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் மற்றும் மாநகராட்சிக்கு புதிய கட்டடம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்த, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, அன்பரசன், எம். பி. , எம். எல். ஏ. , க்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
மொத்தமுள்ள, 82 தீர்மானங்களில், மூன்று தீர்மானங்கள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தங்களது வார்டுகளில் போதிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.
மேலும், 2024- - 25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கான தீர்மானமும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், அ. தி. மு. க. , - - தி. மு. க. , கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்ததால், கூட்டம் முழுதுமே கூச்சல் குழப்பமாக நடந்தது.