காஞ்சிபுரத்தில் நடைபெறும் திமுக முப்பெரும் பவளவிழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்பொழுது, பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர் முதல்வரை நேரில் சென்று சந்தித்து மனு அளிக்க முன் அனுமதியை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் கோரினர். இந்நிலையில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில் அனுமதியை மீறி பேரணியாக சென்று மனு அளிக்க உள்ளதாக அறிவித்திருந்தனர்.
இதனை ஒட்டி இன்று (செப் 29) ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு சுங்குவார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேசில் பிரேம் ஆனந்த் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் கூட்டமைப்பினர் 17 பேர் அம்பேத்கர் சிலை முன்பு கற்பூரம் ஏற்றி பேரணியை துவக்கி 100 மீட்டர் தூரம் சென்ற நிலையில், காவல்துறையினர் அனுமதி இன்றி செல்ல முயன்ற நபர்களை கைது செய்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதுகுறித்து போராட்ட குழுவினர் சுப்பிரமணி கூறுகையில், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் பல வழிகளில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று (செப் 29) காஞ்சி வரும் முதல்வரை சந்திக்க முறையான அனுமதி கூறிய நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் பேரணியாக சென்று முதல்வரை சந்திக்க எங்கள் குழு நிர்வாகிகள் சென்றபோது காவல்துறையினர் கைது செய்தனர் என்றார்.