பல்லாவரம்: மாணவர்களிடம் போலீசார் கஞ்சா வேட்டை
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து, போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் தலைமையிலான, 30க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை, பல்லாவரம், ஆர்.கே.வி., அவென்யூ, 2வது தெருவில், தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில், திடீர் சோதனை நடத்தினர். ஓர் அறையில் 20 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக, சூடான் நாட்டைச் சேர்ந்த முகமது அல்ஸ்மானே, 30, முகமது ஹேதாம் எல்ராயா எல்சிக், 29, ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர். இதில், முகமது அல்ஸ்மானே, 2019 முதல் விசாவை புதுப்பிக்காமல் தங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.