காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கும் இடையே அருள்மிகு ஆரண வல்லித் தாயார் சமேத அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் 108 திவ்ய தேசங்களில், ஸ்ரீ ஊரகத்தான் சன்னதி, ஸ்ரீ காரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ நீரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ கார்வானப் பெருமாள் சன்னதி என நான்கு திவ்ய தேச சன்னதிகள் அமையப்பெற்றுள்ள ஒரே திருக்கோவிலாகவும், திருமழிசையாழ்வாரால் பாடப்பட்ட திருத்தலம் எனும் சிறப்பு பெற்று விளங்குகிறது.
அந்த வகையில் ஓங்கி உயர்ந்த உலகளந்த பெருமாளாக மகாவிஷ்ணு காட்சியளிக்கும் இத் திருக்கோவிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்று இருந்த நிலையில் மீண்டும் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. திருக்கோவிலில் அதிக பொருட்செலவுடன் ஸ்ரீ உலகளந்த பெருமாள் சன்னதி, ஆரண வல்லித் தாயார் சன்னதி, ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு, வண்ணங்கள் அழகுற தீட்டப்பட்டு, ஓவியங்கள் வரைந்து பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று முடிந்தது.
அதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு உலகளந்த பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று புது விமர்சையாக நடைபெற்றது.