செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த துப்புரவு பெண் பணியாளர்கள் போராட்டம்
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளொன்றுக்கு 5000-க்கும் அதிகமான பொதுமக்கள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கு கிறிஸ்டல் எனும் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது, தொழிலாளர்களுக்கு கிரிஸ்டல் நிறுவனத்தின் சார்பில் ஐந்தாயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த மாதம் சம்பளம் வழங்கப்பட்ட போது போனஸாக கொடுக்கப்பட்ட ஐந்தாயிரம் ரூபாயை பிடித்துக் கொண்டு சம்பளம் வழங்கியுள்ளனர். இது குறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து அரசு மருத்துவமனையின் நுழைவு வாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.