உத்திரமேரூர் அடுத்த, சோழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜினி, 65; கூலி விவசாயி. கணவரை இழந்த இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல வீட்டை பூட்டி கொண்டு அப்பகுதியில் விவசாய கூலி வேலைக்கு சென்றார்.
இந்நிலையில், அன்று மாலை திடீரென வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிய துங்கியது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும், காற்றின் வேகத்தால் தீ கொளுந்து விட்டு மள மளவென எரிந்ததால் குடிசை வீடு முழுதுமாக எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் வீட்டிற்குள் இருந்த டி. வி. , பீரோ, கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது.
மேலும், வீட்டுமனை பட்டா, ஆதார் உள்ளிட்டவை தீயில் கருகின.
உத்திரமேரூர் மண்டல துணை தாசில்தார் ஜெயவேல் தலைமையிலான வருவாய்த் துறையினர் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட சரோஜினிக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.