செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேருராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 25, 000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பேருராட்சிக்கு உட்பட்ட ஓதியூர், கடப்பாக்கம், நல்லுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலை சேதமடைந்து, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.
அதனால், நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 1. 86 கோடி மதிப்பீட்டில், நான்கு வார்டுகளில் புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, 5 மாதங்ளுக்கு முன் டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் நடந்தன. இந்நிலையில், 2வது வார்டில், 2 கி. மீ. , நீளம் உடைய ஓதியூர் - முட்டுக்காடு இணைப்பு சாலையில், பழைய சாலை அகற்றப்பட்டு, புதிய சாலை அமைக்கப்படாமல் சாலைப் பணி நிறுத்தப்பட்டு உள்ளதால், தினசரி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பருவமழைக்கு முன் சாலைப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.