செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வருவாய் கோட்ட அளவில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று(செப்.21) நடந்தது. இதில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் தலைமை ஏற்றார். மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன் முன்னிலை வகித்தார். மதுராந்தகம் வேளாண்மை உதவி இயக்குனர் ஷீலா சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: மதுராந்தகம் ஏரியில் துார்வாரி ஆழப்படுத்துதல் பணி நடைபெற்று வருவதால், கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மதுராந்தகம் நகராட்சி கழிவுநீர் கால்வாய்களை, மதுராந்தகம் ஏரி பாசன நீர் கால்வாயுடன் இணைப்பதை தடுக்க வேண்டும். சித்தாமூர், அச்சிறுபாக்கம், பவுஞ்சூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில், விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை உயர்த்தி அமைக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு மின் மோட்டார் இணைப்புகளை விரைந்து வழங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இக்கூட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார் ஒன்றியங்களைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தோட்டக்கலை, வேளாண்மை, வருவாய் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.