செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் வருடந்தோறும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில், வைஷ்ணவா கல்லூரி, பேராசிரியர் தனபால் கல்லூரி, எஸ். ஆர். எம் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி ஆகிய
கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற ஊட்டச்சத்து குறைபாடு, இரத்தசோகை குறித்து விளம்பர சுவரொட்டிகள் தயாரித்தல் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் அவர்கள் வழங்கினார்.
மேலும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதனைத்
தொடர்ந்து, வித்யா சாகர் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா, அங்கன்வாடி பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.