திருப்போரூர் அடுத்த இள்ளலுார் - -செங்காடு இணைப்பு சாலையில், தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழு நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக இள்ளலுார் ஊராட்சி தலைவரும், அ. ம. மு. க. , நிர்வாகியுமான தாண்டவமூர்த்தியின் ஓட்டுனர்வசந்தகுமார், 22, பார்ச்சூனர் காரில் வந்தார்.
அந்த காரை மடக்கி சோதனை செய்த அதிகாரிகள், அதில் இருந்த, 1. 91 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில், திருப்போரூர் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வேலாயுதத்திடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், ஊராட்சி தலைவர் தாண்டவமூர்த்தி, தாலுகா அலுவலகம் வந்தார். எனக்கு உடல்நிலை சரியில்லாததால், இரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காலை தான் வீடு திரும்பினேன்.
சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லவே பணம் எடுத்து வரப்பட்டதாக, பல்வேறு காரணங்களை தெரிவித்தார். மேலும், அவர் மருத்துவ சிகிச்சை பெற்றது குறித்த ஆவணங்களையும் காண்பித்தார்.
எனினும், உரிய ஆவணம்இல்லாததால், பறிமுதல் செய்யப்பட்ட பணம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாயிலாக, திருப்போரூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.