ஏ.டி.எம். மில் நுாதனமாக ரூ.13 லட்சம் கொள்ளை

1057பார்த்தது
ஏ.டி.எம். மில் நுாதனமாக ரூ.13 லட்சம் கொள்ளை
தாம்பரம் அருகே படப்பையில், சவுத் இந்தியன் வங்கி அருகே, அதன் ஏ. டி. எம். , மையம் அமைந்துள்ளது. இதிலுள்ள ஏ. டி. எம். , இயந்திரத்தில் கடந்த 6ம் தேதி, 23. 35 லட்சம் ரூபாய் நிரப்பப்பட்டது.

பணம் நிரப்பினால், ஒரு வாரம் வரை அதில் பணம் இருக்கும். ஆனால், ஏ. டி. எம். , இயந்திரத்தில் பணம் இல்லையென, வாடிகையாளர்கள் வங்கியில் புகார் அளித்தனர்.

சந்தேகமடைந்த வங்கி நிர்வாகத்தினர், ஏ. டி. எம். , மையத்திலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், மர்ம நபர் ஒருவர் ஏ. டி. எம். , மையத்தில் புகுந்து, அந்த இயந்திரத்தில் 100 ரூபாய் உள்ளீடு செய்தால், 1, 000 ரூபாய் வருவதைப் போல் மாற்றி, பணத்தை கொள்ளையடித்தது தெரிந்தது.

இதுகுறித்து, மணிமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்படி, போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, 'நம்பர் பிளேட்' இல்லாத காரில் வரும் மர்ம நபர், ஏ. டி. எம். , மையத்திற்குள் சென்று, இயந்திரத்தின் அமைப்பில் மாற்றம் செய்து, அடுத்தடுத்து இரு நாட்களில், 13 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.

இந்த கொள்ளையில் ஈடுபட்டவர் குறித்தும், வங்கி ஊழியர்கள், ஏ. டி. எம். , இயந்திரத்தில் பணம் நிரப்பும் ஊழியர்களுக்கு தொடர்புள்ளதா எனவும், மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.