கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பாக விவசாயிகள் பேசியதாவது: மாவட்டத்தில் வனவிலங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கும், மனித உயிரிழப்புக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், வனவிலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலெக்டர், வனத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் அமைக்க வேண்டும், களமருதுார் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் உள்ள பிரச்னைகளை முறைப்படுத்த வேண்டும்.
கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியமர்த்தப்பட வேண்டும், சேந்தநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்குவதில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் பேசினர்.