வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சார்பு நீதிமன்ற கட்டிடத்தினை திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என 25. 09. 2024 அன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று(அக்.3) சங்கராபுரம் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்விஎம் ரவி தலைமையில், சங்க செயலாளர் என். ராமசாமி முன்னிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வழக்கறிஞர்கள் முன்பெல்லாம் வழக்குகளை நடத்த வேண்டுமானால் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள நமது பகுதியில் இருந்து தொலை தூரங்களில் உள்ள கடலூர், விருத்தாசலம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் உள்ள நீதிமன்றங்களில் சென்று மிகுந்த சிரமங்களோடு வழக்குகளை நடத்தி வந்தோம். பின்பு சங்கராபுரம் வழக்கறிஞர்கள் சங்கத்தை அமைத்து அதன் மூலம் பல போராட்டங்களை நடத்தியதன் விளைவாக சங்கராபுரத்திற்கு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் உள்ளிட்டவைகள் கொண்டுவரப்பட்டது. மேலும் நடைமுறையில் இருந்து வரும் சார்பு நீதிமன்றத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், இதை உடனடியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனவும் பேசினார்கள்.