சின்னசேலம்: சொத்து பிரச்னையில் அண்ணனை கடத்தி தாக்குதல்

75பார்த்தது
சின்னசேலம்: சொத்து பிரச்னையில் அண்ணனை கடத்தி தாக்குதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், குராலைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வனவர் செல்லமுத்து. இவரது முதல் மனைவி சின்னபொன்னுவின் மகன் சேகர், 45; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இரண்டாவது மனைவி மல்லிகா மகன் சின்னமணி, 37. இவர் சென்னையில் பல் மருத்துவராக உள்ளார்.

செல்லமுத்துவுக்கு, குரால் பகுதியில், 11 ஏக்கர் நிலம், மூன்று வீடுகள் உள்ளன. மகன்களான சேகர், சின்னமணி இடையே, சொத்து தொடர்பாக பிரச்னை இருந்தது. கடந்த, 6ல் சேகர், மளிகை பொருட்கள் வாங்க, தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் வந்தார்.

மாலை 6: 00 மணிக்கு, கூல்டிரிங்ஸ் கடையில் நின்றிருந்த சேகரை, ஒரு காரில் வந்த ஐந்து பேர் கடத்திச்சென்றனர். காரை ஓட்டிச்சென்றது சின்னமணி என்பது சேகருக்கு தெரிந்தது.

மேலும் ஆள் நடமாட்டம் இல்லாத, வி. கூட்ரோடு ஆட்டுப்பண்ணை பகுதிக்கு கடத்திச் சென்று, இரும்பு கம்பியால் சேகரை தாக்கினர். படுகாயமடைந்த சேகரை, அதே காரில் ஏற்றிக்கொண்டு, நள்ளிரவு நேரத்தில் தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் துாக்கி வந்து, காரில் இருந்து தள்ளிவிட்டு சென்றனர்.

அவரது தங்கை சுதா, சேகரை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

நேற்று முன்தினம் சேகர் புகார்படி தலைவாசல் போலீசார், சின்னமணி உட்பட, ஐந்து பேர் மீது, 16 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். மேலும் சென்னையில் இருந்த தம்பி சின்னமணியை, நேற்று, போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி