கனியாமூர் சக்தி பள்ளி மாணவி இறந்த வழக்கின் விசாரணை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி பள்ளி விடுதியில் தங்கி பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப் பட்டனர்.
வழக்கை விசாரிக்கும் சி. பி. சி. ஐ. டி, போலீசார் கடந்தாண்டு மே 15ம் தேதி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஆசிரியர்கள் கீர்த்திகா, ஹரிப்பிரியா வழக்கில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல் தகவல் அறிக்கை, ஸ்டேஷன் பொது நாட்குறிப்பு, பள்ளியில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் விபரம், சி. சி. டி. வி. , நகல், போன் கால் ரெக்கார்டு உள்ளிட்ட விபரங்களை கேட்டு மாணவியின் தாய் தொடர்ந்த வழக்கு நேற்று கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், சி. சி. டி. வி. , காட்சி மற்றும் கால் ரெக்கார்டு விபரங்களை கேட்டு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து, வழக்கின் விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மேலும், வழக்கின் விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட ஆவணம், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.