ஈரோடு: தொழிற்சாலையில் உற்பத்தி பாதிப்பு.. திட்டப் பணிகளில் சுணக்கம்
ஈரோடு மாநகராட்சியில் பெரும்பள்ளம் ஓடை விரிவாக்கம், சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி, ஈரோடு மத்திய பஸ் நிலையத்தில் புதிய வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றனர். தீபாவளி முடிந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் கடந்தும் ஈரோட்டுக்கு திரும்பி வரவில்லை இதனால் மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: - மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வந்தனர். இதில் பெரும்பாலானோர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்ற நிலையில் பலர் தற்போது வரை திரும்பவில்லை. இதைப்போல் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்களும் இதுவரை திரும்பி வரவில்லை. ஈரோட்டில் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை போலவே அவர்களது சொந்த மாநிலத்திலும் வழங்க அம்மாநில அரசுகள் முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திலேயே பணிபுரிய முடிவு எடுத்துள்ளனர். எனவே சொந்த ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.