கோபி: பெண்ணின் கழுத்தை நெரித்த கொள்ளையன் - சிசிடிவி வீடியோ

6955பார்த்தது
கோபி: வீட்டில் கொள்ளையடிக்கச் சென்ற நபர் அங்கு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கேத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ், இவர் எல்.ஐ.சி யில் முகவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும் ஸ்ரீதர் சுகந்த் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். வழக்கம்போல அனைவரும் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். நடராஜ் வீட்டில் ஒரு அறையிலும், இவரது மனைவி காஞ்சனா வெளி அறையிலும், இரண்டு மகன்கள் வெவ்வேறு அறைகளில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது நள்ளிரவில் நடராஜ் வீட்டிற்கு முகமூடி அணிந்த கொள்ளையன் நடராஜ் வீட்டினுள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை வேறு புறமாக திருப்பி வைத்துவிட்டு வீட்டினுல் உள்ளே சென்றுள்ளார். உள்ளே சென்ற கொள்ளையன் வீட்டு வாசலில் துணி காய வைப்பதற்காக கட்டியிருந்த கயிற்றினை அறுத்து கையில் எடுத்துச்சென்றுள்ளார்.

பின்னர் வீட்டின் கதவை திறக்க முயற்சித்தபோது வீட்டின் உள்பகுதியில் பூட்டியிருந்ததை அறிந்த கொள்ளையன் வீட்டின் வெளியே நீண்ட நேரமாக காத்திருந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து நடராஜ் அதிகாலை கழிவறை செல்வதற்காக எழுந்து தண்ணீர் அருந்திவிட்டு கதவை திறந்துள்ளார். கதவைத் திறந்து வெளியே சென்ற நடராஜ் கழிவறை சென்ற நேரத்தில் திடீரென வெளியில் பதுங்கி இருந்த கொள்ளையன் உள்ளே சென்று அறையில் தூங்கிக் கொண்டிருந்த காஞ்சனாவின் முகத்தில் துணியை அழுத்தியும், கழுத்தை நெறித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது,

அப்போது அவர் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டாவது மகன் சுகந்த் எழுந்து வந்து பார்த்தபோது தனது தாயை மர்மநபர் ஒருவர் கழுத்தை நெரிப்பதை கண்டு சத்தமிடவே அவரது தந்தையும் கழிவறையிலிருந்து உள்ளே ஓடி வந்துள்ளார். இவர்களை கண்டதும் கொள்ளையன் வீட்டை விட்டு வெளியே தப்பித்து சென்று மாயமாகியுள்ளார்.

இரவு நேரம் என்பதால் கொள்ளையனை பிடிக்க முடியவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து, காலை நடராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கடத்தூர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கடத்தூர் காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கை ரேகை நிபுணர்களை வரவைத்து சோதனை செய்து தடயங்களை சேகரித்தும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் வருகின்றனர்,

மேலும் நடராஜ் வீட்டிலிருந்து சுமார் 200 அடி தூரம் உள்ள கிணற்றில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் கிடைப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் கிணற்றில் இருந்து கொள்ளையன் அணிந்திருந்த முகமூடி, கத்தி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கிணற்றிலிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.