ஈரோடு காந்திஜி சாலை, பன்னீர்செல்வம் பூங்கா, அசோகபுரம், கங்காபுரம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஜவுளி சந்தைகள் செயல்படுகின்றன.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, மும்பை, கொல்கத்தா, சூரத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரெடிமேட், சேலை, ஜீன்ஸ் உள்ளிட்ட புதிய ஜவுளி ரகங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வர துவங்கியுள்ளது.
இதுகுறித்து கனி மார்க்கெட் வாரச்சந்தை அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
தீபாவளி பண்டிகை முன்னிட்டு மும்பையில் இருந்து ஜீன்ஸ், குழந்தைகளுக்கான ரெடிமேட் துணிகள், சூரத்தில் இருந்து சேலை ரகங்கள் அதிக அளவில் வந்துள்ளன.
குறிப்பாக, மும்பை, கொல்கத்தா ஆகிய பகுதியில் இருந்து வரும் ரெடிமேட் ரகங்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. சேலை ரகம் ரூ. 150 முதல் ரூ. 2, 500 வரையும், சட்டை ரகம் ரூ. 200 முதல் ரூ. 1, 500 வரையிலும், குழந்தைகளுக்கான ரெடிமேட் ரூ. 300 முதல் ரூ. 2, 000 வரையிலும் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், ஈரோடு மாவட்டத்தில் தயாரிக்கப்படும் துணி ரகங்கள், பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.
தீபாவளி நெருங்குவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறு வியாபாரிகள் வந்து ஜவுளிகளை எடுத்துச் செல்கின்றனர்.