புனேவில் இருந்து கோவை வரை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 வயது சிறுமி தனது தந்தையுடன் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்தார். இந்த ரயிலில், ரயில்வே ஒப்பந்த தொழிலாளியான உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த நவீத் சிங் (வயது 30) என்பவர் படுக்கை விரிப்பை மாற்றுதல் மற்றும் கழிவறையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணி அளவில் சேலம் ரயில் நிலையத்திற்கும், ஈரோடு ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ரயில் மெதுவாக வந்துகொண்டிருந்தது. அப்போது நவீத் சிங், அந்தச் சிறுமிக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி கூச்சலிட்டதுவே, உடனே நவீத் சிங் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இதுகுறித்து ஈரோடு ரயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து நவீத் சிங்கைத் தேடி வந்தனர். இந்த நிலையில், ஈரோடு ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே காலனி குடியிருப்புப் பகுதியில் பதுங்கியிருந்த நவீத் சிங்கை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.