வேடசந்தூர் அருகே உள்ளது ஸ்ரீராமபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டி ஏடி காலனி. 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு என்று தனி சுடுகாடு ஒன்று உள்ளது. அதே ஊரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்ற இளைஞர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்காக குழி தோண்டுவதற்காக கிராமத்தினர் சென்று பார்த்த பொழுது அங்கு ஆறு பேரை புதைத்த இடத்தை காணவில்லை அதற்கு பதிலாக பத்தடி அளவிற்கு ஆழமான பள்ளம் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் விசாரித்த பொழுது இரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் மண் கொள்ளையில் ஈடுபட்ட பொழுது அங்கு வரிசையாக புதைக்கப்பட்டிருந்த ஆறு பேரின் சடலங்களுடன் சேர்த்து மண்ணள்ளி சென்றது தெரிய வந்தது. தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வடிவேலு பட பானியில் இங்கதான் எங்க தாத்தா சித்தப்பா பெரியப்பா அத்தை மற்றும் உறவினர்களை புதைத்து வைத்திருந்தோம் ஆனால் தற்பொழுது வந்து பார்க்கும் பொழுது ஒருவரையும் காணவில்லை எனவே அதிகாரிகளும் போலீசாரும் எங்களது புதைத்த உறவினர்களின் உடலை கண்டுபிடித்து தரவேண்டும் என கூறி வேடசந்தூர் எரியோடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண் கொள்ளையர்கள் மனசாட்சி இன்றி புதைத்த உடலையும் அள்ளிச் சென்ற சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.