நத்தம் அருகேயுள்ள வேம்பரளி சுங்கச்சாவடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து கவிழ்ந்து படுகாயம் அடைந்த காவலாளி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொட்டப்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன் (50). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்லிற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்று விட்டு மீண்டும் மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தார். நத்தம் அருகேயுள்ள வேம்பரளி சுங்கச்சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அய்யப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் அய்யப்பன் புதன்கிழமை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.