
தர்மபுரி: பழங்குடியின மாணவர்களுக்கு ஆட்சியர் விழிப்புணர்வு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட எல்லையில் ஏற்காடு மலை அடிவாரத்தின் பின்புறத்தில் அமைந்துள்ளது போதக்காடு ஊராட்சி இங்கு பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தங்கி படித்து வரும் சூழலில் சுமார் 250 பேர் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தர்மபுரி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். மேலும் அரசு பள்ளியில் பயிலும் 40 மாணவ மாணவிகள் தினமும் சுமார் 10 கிலோமீட்டர் நடந்து செல்கின்றனர். இது குறித்து தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட ஆட்சியர் நேற்று (ஜனவரி 04) கரடு முரடான காட்டுப்பாதையில் நான்கு கிலோமீட்டர் பயணம் செய்து போதக்காடு பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்தார். மேலும் கிராமங்களில் உள்ள பழங்குடியினர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தினமும் பள்ளிக்கு நடந்து செல்ல தேவையில்லை, பள்ளி கல்லூரிகளுக்கு விடுதி வசதி தாங்கள் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். மேலும் அமைச்சர்களிடம் தெரிவித்து விரைவில் சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.