தருமபுரி நகராட்சி மற்றும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று பிப்ரவரி 22, தருமபுரி எஸ்வி ரோடு பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆர். சதீஷ் கலந்து கொண்டு வணிகர்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.
பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர். சதீஷ் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணி எஸ்வி ரோட்டில் தொடங்கி, பெரியார் மன்றம், பேருந்து நிலையம், நகராட்சியில் முடிவடைந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகராட்சி ஊழியர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மஞ்சப்பை பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர். தருமபுரி சுற்றுச்சூழல் பொறியாளர் பி கிருஷ்ணன், உதவி பொறியாளர் லாவண்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.