தர்மபுரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைப்பு கூட்டம் தர்மபுரியில் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் மத்திய அரசு வழக்கறிஞர் மோகன், மாவட்ட பொருளாளர் வடிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் காளியம்மாள், நகரத் தலைவர் வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அருள் அன்பரசு, தொகுதி பார்வையாளரும் சேலம் மண்டல பொதுச் செயலாளருமான அருள் பெத்தையா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். காங்கிரசின் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மறுசீரமைப்பது, கிராம அளவில் புதிய குழுக்களை ஏற்படுத்தி உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் அருள் அன்பரசு பேசுகையில், தமிழகத்தில் வருகிற 2026 பொதுத் தேர்தலில் நிச்சயம் கூட்டணி ஆட்சி தான் அமையும். அதற்கு ஏற்றார் போல் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார்.