விநாயகர் சதுர்த்தி விழா இம்மாதம் 7 ந் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்தி நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். சுமார் 1 அடி முதல் 10 அடி வரை விதவிதமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்படும். இதைத் தொடர்ந்து விநாயகர் சிலை தயாரிப்பு பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தருமபுரி அடுத்த பழைய தருமபுரி, அதியமான்கோட்டை, சவூளுர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நந்தி விநாயகர், சித்தி புத்தி வினாகர், கல்வெட்டு விநாயகர், ராஜ விநாயகர், தாமரை வினாயகர், பாகுபலி, முருகன், சிம்மவாகன விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை சுமார் 10 அடி உயரம் வரை வித விதமாக உருவாக்கப்படுகிறது.
விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறும்போது, தாங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதியமான்கோட்டை பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். விநாயகர் சிலைகள் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வகையில் தயாரித்து வருகிறோம் என கூறினர்.