ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த குருசாமி என்பவர் சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளார்.
ரூ. 50 லட்சம் முதலீடு செய்தால், 6 ஈமு கோழி குஞ்சுகள், தீவனம், கொட்டகை மற்றும் பராமரிப்புத் தொகை வழங்கப்படும், 1.5 ஆண்டுகள் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி அளிக்கப்படும். இப்படி 3 விதமான திட்டங்களை விளம்பரப்படுத்தி மக்களை நம்ப வைத்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுசி நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது.
1087 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 19 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். 2012 ஆம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மோசடி செய்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மோசடி செய்த தொகையான ரூபாய் 19 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.