கோவை: அரசு பேருந்து மக்களை அழைத்து வந்ததாக குற்றச்சாட்டு!

81பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது, அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக திமுகவினர் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதல்வரின் வருகையை முன்னிட்டு, கோவை விமான நிலையத்தில் திமுகவினர் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களை அழைத்து வருவதற்காக 200-க்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, கோவை கோட்டத்திற்கு உட்பட்ட 45 பேருந்துகள் மட்டுமே வாடகைக்கு எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், சம்பவ இடத்தில் 200-க்கும் அதிகமான பேருந்துகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் பயன்படுத்தப்பட்டது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பிற அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து பேருந்துகள் வரவழைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி