கோவை, நஞ்சுண்டாபுரம் ரோடு இந்திரா நகர் 4வது வீதியில் 60 வயது மதிக்கத்தக்க ஆலமரம் ஒன்று வெட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் இயற்கை சமூக ஆர்வலர்களுக்கு நேற்று (மார்ச் 23) தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதியின்றி மரத்தை வெட்டுவதை தடுத்து நிறுத்தினர். மரத்தை வெட்ட முயன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மரம் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
மேலும், மரங்களை நடும்போது சரியான இடத்தைத் தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும் என்றும், அபிவிருத்தி என்ற பெயரில் நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து நிழல் தரும் மரங்களை வெட்டுவதால் கோடைகாலத்தில் பொதுமக்கள் எண்ணற்ற சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.