மருதமலை கோயிலில் லிஃப்ட் அமைக்கும் பணி தீவிரம்

58பார்த்தது
மருதமலை கோயிலில் லிஃப்ட் அமைக்கும் பணி தீவிரம்
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படும் லிப்ட் பணி 70 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முருகனின் ஏழாவது படைவீடாக கருதப்படும் இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளை ஏறுவதில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை எதிர்கொள்வதால், அவர்களின் வசதிக்காக லிப்ட் அமைக்க அறநிலையத்துறை முடிவு செய்தது.

2021ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்த இப்பணி, ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் அருகே அமைக்கப்படும் இந்த லிப்ட் அமைப்பில், வாகன நிறுத்துமிடத்திலிருந்து கோயில் வெளிப்பிரகாரம் வரை இரண்டு நிலைகளில் லிப்ட்கள் அமைக்கப்படுகின்றன.

பாறைகள் நிறைந்த பகுதியில் லிப்ட் அமைப்பதற்கான அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் பணிகள் சற்று காலதாமதமானது. தற்போது வேகமாக நடைபெற்று வரும் இப்பணி அடுத்த மூன்று மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கோயில் வளாகத்தில் ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் கொடிமர மண்டபம் கட்டும் பணியும் வேகமாக நடைபெற்று வருவதாக கோயில் அதிகாரிகள் நேற்று (செப்.,19) தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி