புதிய ஆண்டு பிறப்பை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குறிப்பாக, ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை கொண்ட புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அருகம்புல் மாலை, 108 தேங்காய்களால் ஆன மாலை மற்றும் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை பக்தர்களின் பார்வையை கவர்ந்தது. புதிய ஆண்டில் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டி பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் நள்ளிரவில் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தாலும், கோவையைச் சேர்ந்த பலர் ஆண்டு துவக்கத்தில் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.