சூலூர்: நிலத்தடி நீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி

64பார்த்தது
கோவை மாவட்டம், சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை நிலத்தடி நீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருமத்தம்பட்டி செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன்-மீனா தம்பதியினரின் 2 வயது மகன் சிரஞ்சீவி விக்ரம், எதிர்பாராதவிதமாக வீட்டின் பின்புறம் இருந்த நிலத்தடி நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.
வாழைக்காய் வியாபாரம் செய்து வரும் கமலக்கண்ணன்-மீனா தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். நேற்று குழந்தை சிரஞ்சீவி விக்ரம் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போனார். பதறிப்போன பெற்றோர், குழந்தையை வீடு முழுவதும் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த நிலத்தடி நீர் தொட்டியின் அருகே சென்றபோது, குழந்தை தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி