கோவை, நீலாம்பூர் கதிர் அறிவியல் கல்லூரியில் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேற்று கலந்து கொண்டு மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விரிவாக பேசினார். அவர் பேசுகையில், சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம், இன்றைய இளைஞர்களின் நிலையை பிரதிபலிக்கிறது.
அதில், கதாநாயகன் நன்றாக படித்து, பின்னர் தீய வழிகளில் சென்று திருந்துவதை காட்டியுள்ளனர். தற்போதைய காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தான் நடந்து வருகின்றன. ஆனால், படத்தில் கொஞ்சமாக காட்டியுள்ளனர். நடைமுறையில் எண்ணற்ற பிரச்சனைகள் கல்லூரி முடிந்த பிறகு வரும். எனவே மாணவர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க வேண்டும், என்று எச்சரித்தார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி கார்த்திகேயன், கோவை மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்படும். மாணவர்கள் போதை பாதையில் செல்லாமல் தடுக்க அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும், என்று உறுதியளித்தார்.