கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் நேற்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரீசன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், ஹரேன் பால், பாபு என்ற பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோரிடம் நீதிமன்றம் தனி அறையில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை நடத்தியது. சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், ஒவ்வொருவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் நீதிபதி கேள்விகள் எழுப்பினார். வழக்கின் முந்தைய விசாரணையில் 50க்கும் மேற்பட்ட அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது 313 சட்டப்பிரிவின் கீழ் குற்றவாளிகளிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற 15ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும், விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.