

கோவை: ஏடிஎமில் இருந்த பாம்பு; பொதுமக்கள் அச்சம்.. பரபரப்பு வீடியோ
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் நேற்று பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதாகக் கூறப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையத்திற்குச் செல்ல அச்சமடைந்தனர். வங்கி ஊழியர்கள் அளித்த தகவலின்படி, இந்தியன் வங்கியின் துணை மேலாளர் ஏடிஎம் அறையில் பணம் பரிமாற்றம் அல்லது ஆய்வுக்காக சர்வர் மற்றும் யூபிஎஸ் அமைப்புகள் உள்ள கட்டுப்பாட்டு ரேக்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது, சிறிய பாம்பு ஒன்று உள்ளே ஊர்ந்து செல்வதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் ஏடிஎம் அறை முழுவதும் முழுமையாக சோதனை செய்தனர். ஆனால், பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், பாம்பு எதுவும் இல்லை என்றும் கூறிவிட்டுச் சென்றனர். இருப்பினும், ஏடிஎம் அறையில் பாம்பு இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.