கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் விசாரணைக்காக 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர் ரமேஷ் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று கையும் களவுமாக கைது செய்தனர்.
செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் காவல் துறை விசாரணைக்காக செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. அங்கு காவலராகப் பணிபுரிந்து வரும் ரமேஷ் என்பவர் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளார்.
கிருஷ்ணமூர்த்தியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்க காவலர் ரமேஷ் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி, இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று கிருஷ்ணமூர்த்தி, லஞ்சப் பணமான 1000 ரூபாயை காவலர் ரமேஷிடம் கொடுக்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரமேஷை மடக்கிப் பிடித்தனர். ரசாயனம் தடவிய அந்தப் பணத்தை ரமேஷிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார், அவரை செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.