கோவை, கரடிமடை பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி காமராஜ்(40) கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், ஆலந்துறை பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் (35). இவர் தனது மனைவி பாக்கியலட்சுமி (வயது 35) மற்றும் குடும்பத்தினருடன் தற்போது கரடிமடை பகுதியில் வசித்து வருகிறார். காமராஜ் கூலி வேலை செய்து வரும் நிலையில், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தெற்கு தோட்டத்தில் மரம் வெட்டும் வேலைக்குச் சென்று உள்ளார். அப்போது மரம் வெட்டும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததாக தெரிகிறது. உடனடியாக அவரை கரடிமடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனை வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் காமராஜின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
காமராஜின் மனைவி பாக்கியலட்சுமி, தனது கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பேரூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.