கோவை டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்த செல்வகுமாரின் மகள் சூர்யா (23), தான் பணிபுரியும் நிறுவனத்தில் ஹரிஹரன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் மேஜர் என்பதால் தங்கள் காதலை வீட்டில் தெரிவித்த நிலையில், சூர்யாவின் தந்தை செல்வகுமார் இக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சூர்யாவை துடியலூர் அதிர்ஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள உறவினர் சுப்ரமணியன் வீட்டில் கடந்த நான்கு நாட்களாக அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சூர்யாவின் கைப்பேசியை பறித்து வெளி உலகத் தொடர்பின்றி வைத்துள்ளனர்.
இந்நிலையில், சூர்யா தனது உறவினரின் தொலைபேசியிலிருந்து காதலன் ஹரிஹரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஹரிஹரன் உடனடியாக காவல் துறையின் அவசர உதவி எண் 100-க்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக ஹரிஹரனின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். பெண்ணின் வீடியோவை நேற்று அவர் வெளியிட்ட பின்னரே காவல்துறையினர் உரிய விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளனர்.
இதையடுத்து, சிறை வைக்கப்பட்ட பெண் மற்றும் அவரது காதலன் இரு தரப்பினரையும் விசாரணைக்காக துடியலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.