கோவை: வெளிநாட்டு வேலை மோசடி அம்பலம் - 46 பேர் ஏமாற்றம்

58பார்த்தது
கோவையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 46 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பரமக்குடியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரை பீளமேடு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற தகராறு ஒன்றின் விசாரணையில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் அளித்த புகாரில், பாரதிராஜா சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக 1 லட்சம் பெற்றுக்கொண்டு போலி பணி ஆணை வழங்கியது தெரியவந்தது.
விசாரணையில், பாரதிராஜா மற்றும் அவரது கூட்டாளியான செந்தில் ஆகியோர் இணைந்து ஆன்லைன் மூலம் வேலை தேடும் நபர்களின் தொலைபேசி எண்களைச் சேகரித்து, பெண் ஒருவர் மூலம் ஆசை வார்த்தை கூறி 93 பேரை ஏமாற்றியுள்ளனர். விண்ணப்பித்தவர்களிடம் பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு, ஆன்லைன் நேர்காணல் மற்றும் மே 1-ம் தேதி சிங்கப்பூர் பயணம் என்று கூறி ஒவ்வொருவரிடமும் 1 லட்சம் முன்பணம் பெற்றுள்ளனர். மேலும், மீதமுள்ள 2 லட்சத்து 75 ஆயிரம் இரண்டு வருட சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இதற்காக சின்னியம்பாளையத்தில் மண்டபம் வாடகைக்கு எடுத்து, அங்கு வந்த 46 பேருக்கு விருந்து அளித்து போலி பணி ஆணைகளை வழங்கியுள்ளார். இதில் ஒருவரை கைது செய்த காவல்துறையினர் மற்றொருவரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி