அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் தேசிய நீடித்த வேளாண்மைக்கான இயக்கம் (என்.ஏ.டி.பி.) திட்டத்தின் கீழ், அதிக காரத்தன்மை கொண்ட மண்ணை நடுநிலைக்கு கொண்டு வரும் பொருட்டு, விவசாயிகளுக்கு ஜிப்சம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகள் தங்கள் நிலத்தில் மண் பரிசோதனை செய்து அதற்கான அறிக்கையை கட்டாயம் பெற வேண்டும். அந்த மண் பரிசோதனை அறிக்கையின்படி, மண்ணின் அமிலத்தன்மை 8.5க்கு மேல் இருந்தால், அந்த மண் அதிக காரத்தன்மை கொண்டதாக கருதப்படும். இத்தகைய மண்ணை நடுநிலைக்கு கொண்டு வர ஜிப்சம் இடுவது மிகவும் அவசியமாகும்.
எனவே, மானிய விலையில் ஜிப்சம் பெற விரும்பும் விவசாயிகள், தங்களது மண் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் தகுதியான விவசாயிகளுக்கு ஜிப்சம் மானிய விலையில் வழங்கப்படும். இந்த வாய்ப்பை அன்னுார் வட்டார விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி தங்கள் நிலத்தின் வளத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு வேளாண் உதவி இயக்குனர் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.