கோவை மாவட்டம், காரமடையில் புகழ்பெற்ற அரங்கநாதர் கோவிலில் மாசிமக தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் (மார்ச் 13) நடைபெற்றது.
தேரோட்டத்தை தொடர்ந்து, நேற்றிரவுபந்த சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காரமடை அரங்கநாத பெருமாளுக்கு கோவிலை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மேளதாள இசை முழங்க, பந்த சேவை எனும் தீப்பந்தம் ஏந்தி நடனமாடியபடி வந்தனர். அவர்கள், அரங்கநாத பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
பாரம்பரியம் மாறாமல் பந்த சேவை தூக்கும் பக்தர்கள், பல நூறு கிலோ எடை கொண்ட பிரமாண்ட தீப்பந்தங்களை தோளில் சுமந்தபடி நான்கு ரத வீதிகளில் நடனமாடியபடி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 10. 30 மணிக்கு குதிரை வாகன உற்சவம் நடைபெற்றது.
அரங்கநாத சுவாமியை தரிசிக்க பக்தர்கள் திரண்டு வந்ததால் காரமடை பகுதியே விழாக்கோலம் பூண்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.