தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட 15-வது பிரதிநிதிகள் மாநாடு, கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள கேரளா கிளப் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதில் விவசாய கடன்கள் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய விளைபொருள் விலை நிர்ணயத்தில் முனைவர் எம். எஸ். சுவாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்திட வேண்டும். விவசாயிகளுக்கு வயது முதிர்வின் போது மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் விவசாயிகளுக்காக தனி பட்ஜெட் உருவாக்க வேண்டும். நொய்யல் விவசாயிகள் பாசன சபை அமைக்கப்பட்டு பராமரிப்பு பணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.