மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், அருகிலுள்ள கிராமங்களின் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
நேற்றிரவு, கல்லாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கோத்தகிரி சாலையைக் கடந்து சிறுமுகை வனச் சரகத்துக்கு உட்பட்ட ஓடந்துறை காப்பு காடு பகுதிக்கு சென்றன. இதில் 'பாகுபலி' என அழைக்கப்படும் ஒரு காட்டு யானை மட்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல், மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமப்பாளையம் கிராமத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் புகுந்தது. திடீரென யானையைக் கண்ட கிராம மக்கள் அச்சமடைந்தனர். சிலர் சத்தமிட்டு யானையை விரட்ட முயன்றனர்.
அப்போது, கூட்டத்திலிருந்த ஒரு பெண், "சாமி என்று கையெடுத்து கும்பிடு, யானை போய்விடும்" என்று கூறினார். உடனே அங்கிருந்த பெண்கள் அனைவரும் "சாமி போய்விடு" என்று யானையைப் பார்த்து வணங்கினர். இதனைக் கேட்ட யானை, முன்னோக்கி வராமல் அப்படியே நின்று கொண்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து, பாகுபலி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.