கோவை: ஆயுத படையை ஆய்வு மேற்கொண்ட காவல்துறை தலைவர்
கோவை மாவட்டத்தில், நேற்று (நவம்பர் 23) மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கான கவாத்து, அரசால் வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்கள் மற்றும் உடைபொருள்களுக்கான ஆய்வினை மேற்கொண்டார். இதில் பெண் மற்றும் ஆண் காவலர்கள் அலங்கார அணிவகுப்பில் பங்கேற்று தங்களது உடல் வலிமையையும் மன உறுதியையும் வெளிப்படுத்தினர். அதனை தொடர்ந்து சட்ட விரோத கூட்டத்தை கலைக்கும் கவாத்து(Mob operation) உட்பட பல்வேறு கவாத்துகளும் நடைபெற்றது. மேலும், இவ்வாய்வின் போது கவாத்து, உடைப்பொருள்கள் மற்றும் அரசு வாகனங்களை சிறந்த முறையில் பராமரித்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் ஆயுதப்படை காவலர்களுக்கு சட்ட ஒழுங்கு மற்றும் கைதி வழிக்காவல், முக்கிய பிரமுகர் வருகை போன்ற இதர பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். காவலர்களுக்கான குறைகளையும் கேட்டறிந்தார். இவ்வாய்வில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்களும் உடனிருந்தார்.