கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள சங்கர் நகர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று மின் கம்பங்கள் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதும், அங்கு விரைந்த மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மின் கம்பங்கள் அருகில் இருந்த சாலையோர மரங்களும் முறிந்து விழுந்த நிலையில், அவற்றை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினரும் ஈடுபட்டனர். மின் கம்பங்கள் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்ததால், ஒரு மணி நேரத்துக்கு மேலாக மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.