சாய்பாபா காலனி: பெண்களை தவறாக வீடியோ எடுத்த காவலர் கைது!

60பார்த்தது
கோவை சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முந்தினம் இரவு ஒரு நபர் தனது செல்போனில் அந்த வழியாக செல்லும் பெண்களை வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த நபரை பிடித்து எதற்காக வீடியோ எடுக்கிறாய் என்று கேட்டுள்ளனர். ஆனால் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து காவலர்கள் நடத்திய விசாரணையில் அவரது பெயர் பாலமுருகன் என்பதும், போக்குவரத்து காவலராக பணிபுரிவதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் சாய்பாபா காலனி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து அதில் உள்ள வீடியோ குறித்த பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடமும் புகார் செய்யப்பட்டது. போக்குவரத்து போலீஸ்காரர் பாலமுருகனை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், செல்போனில் பதிவு செய்த வீடியோவை கைப்பற்றி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவும் நேற்று போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி