கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, மருதமலை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அடிக்கடி காணப்படுகிறது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதிகளில் வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதும், விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கதிர்நாயக்கன்பாளையத்தில் வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று ஊருக்குள் நுழைந்து வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் தங்கள் கைபேசிகளில் பதிவு செய்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், இவ்வாறு ஊருக்குள் வந்து வாழை உள்ளிட்டவற்றை காட்டு யானைகள் உண்ணும் பழக்கம் ஏற்பட்டால், அடிக்கடி ஊருக்குள் வரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனைத் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.